இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு இருமுனைப்போட்டி நிலவிவரும் நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படுகின்ற தேசிய சபையில் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவு பெருகிவருகின்றதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி கண்டி, மாத்தளை, பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சபை உறுப்பினர்கள் செந்தில் தொண்டமான் பக்கம் நிற்பதாகவும், வாக்கெடுப்பொன்று நடத்தப்படும் பட்சத்தில் செந்திலுக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
தேசிய சபையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகளே வாக்கெடுப்பின்போது தீர்மானிக்கும் சக்தியாக அமையக்கூடும். அந்தவகையில் இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதிநிதிகளும் செந்தில் தொண்டமானுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இம்மாதம் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது காங்கிரஸின் தலைவர் பதவிக்கு உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்நியமனம் தொடர்பிலேயே தற்போது மலையக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.
தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவுள்ளதை அறிவித்துள்ள செந்தில் தொண்டமான், தேசிய சபை உறுப்பினர்களை வளைத்து போடுவதற்கான பேச்சுகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றார். மறுபுறத்தில் மருதபாண்டி ராமேஷ்வரனும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றார்.
தற்போதைய சூழ்நிலையில் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவு பெருகியுள்ளதால், மற்றைய வேட்பாளர் இறுதி நேரத்தில் பின்வாங்கக்கூடும் எனவும், வாக்கெடுப்பின்றி தலைவர் ஏகமனதாக தெரிவுசெய்வதற்கான முனைப்புகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச்செயலாளர் பதவி தொண்டமான் குடும்பம் வசம் உள்ள நிலையில், தலைவர் பதவியும் அவர்கள் குடும்பவம் வசம் சென்றால், அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் – கட்சிக்கு விசுவாசமான சிலரை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து, வாக்கெடுப்பு மூலம் செந்தில் தொண்டமானை தெரிவுசெய்து, நியமனத்தை நியாயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக தகவல்.
தேசியசபை கூடும்போது ஏதேனும் ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர் முன்மொழியப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் , அவ்வாறு இல்லாமல் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் அவரின் நியமனம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவராக மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவரும், காங்கிரஸின் முக்கியஸ்தருமான துரை மதியுகராஜா வாக்கெடுப்பின்றி தெரிவுசெய்யப்படக்கூடும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தவிசாளர் பதவியை பெண் பிரதிநிதியொருவருக்கு வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதால் அப்பதவி பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுசியா சிவராஜாவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸின் அரசியல் மற்றும் தொழிற்சங்கம் என இரு பிரிவுளுக்கும் இரு தேசிய அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்ற யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது. உப தலைவர்களுக்கான போட்டி பட்டியலில் ரூபன் பெருமாளும் இடம்பிடித்துள்ளார்.
“ கட்சியின் வளர்ச்சி, சர்வதேச தொடர்பு, மத்திய அரசுடனான உறவு ஆகிய விடயங்களை கருதியே செந்திலுக்கான ஆதரவு வலுக்கின்றது.” – என்று பெயர் குறிப்பிடவிரும்பாத தேசிய சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஆர்.சனத்










