தேசிய பாடசாலைகள்…. உண்மை செய்தி என்ன?

இந்த பதிவை வாசிப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் 16 தேசிய பாடசாலைகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை.

இலங்கை முழுவதும் 1000 தேசிய பாடசாலைகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது ஒரு தேசிய மட்டத்திலான திட்டமாகும். ஆகவே 9 மாகாணங்களிலும் அதில் அடங்கும் மாவட்டங்களிலும் உள்ள எம்.பிக்களோ , அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இதற்கு தனிப்பட்ட ரீதியாக உரிமை கோர முடியாது என்பதை முதலில் சொல்லி வைக்க விரும்புகிறேன். அது தான் உண்மையும் கூட. அது எப்படி நியாயமாகும் என்று கேட்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

புதிய அரசாங்கத்தின் கொள்கை

தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 4 ஆவது அத்தியாயத்தில் பயனுள்ள பிரஜையும் மகிழ்ச்சியான குடும்பமும் என்ற தலைப்பின் கீழ் கல்வி என்ற பிரிவில் பாடசாலை முறையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற விடயத்தில் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதான கொத்தணி பாடசாலை முறை பற்றி கூறப்பட்டுள்ளது. அதன் படி ஒரு பிரதேச செயலகத்தில் குறைந்தது 3 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படல் வேண்டும் என்பது பரிந்துரையாகும். நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன. ஏற்கனவே இம்மாவட்டத்தில் 7 பெரும்பான்மை கல்லூரிகள் தேசிய பாடசாலைகளாக விளங்குகின்றன. ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை (அல் மின்ஹாஜ்– ஹபுகஸ்தலாவை) இருக்கின்றது.

ஆகவே மேலதிகமாக ஒரு பிரதே ச செயலாளர் பிரிவில் 3 பாடசாலைகள் படி 15 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலதிக ஒரு பாடசாலையே முதற்கட்டமாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.

இதில் மூன்று கட்டங்கள் உள்ளன.

1) எந்தவொரு தேசிய கல்லூரியும் இல்லாத 123 பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு மாகாண பாடசாலையை தேசிய கல்லூரியாக மாற்றுதல். ( இந்த பிரிவிலேயே நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியும் கண்டி மாவட்டத்தில் இராமகிஷ்ணா கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன)

2) தேசிய கல்லூரிகளாக உருவாக்கம் பெறத்தக்க வகையில் அடையாளம் காணப்பட்ட 673 மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்துதல்.

3) ஏற்கனவே நாட்டிலுள்ள 373 தேசிய கல்லூரிகளை இன்னும் வளங்கள் அடிப்படையில் மேம்படுத்துதல்

ஏனைய பாடசாலைகள் அவ்வாறு தரமுயர்த்தப்பட குறைந்தது ஒரு வருட காலமேனும் செல்லும். அவை இரண்டாம் கட்டத்தில் உள்ளன. ஏனெனில் தேசிய பாடசாலை கட்டமைப்புக்கு அவற்றை ஒரே இரவில் மாற்ற முடியாது. அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(உ+ம்) ஆசிரியர், கட்டிடம், காணி மற்றும் ஏனைய வளங்கள்)

மூன்றாம் கட்டத்தில் ஏற்கனவே தேசிய பாடசாலைகளாக செயற்படும் கல்லூரிகளுக்கு மேலதிக வளங்கள் சேர்க்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதியின் நிபுணத்துவ ஆலோசனை குழுவான வியத்மக அமைப்பினரால் ஜனாதிபதியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதே சுபீட்சத்தின் நோக்கு திட்டம். இதில் உள்ளூர் அரசியல்வாதிகளினதோ அல்லது வேறு எவரினதோ தலையீடுகள் இருந்ததில்லை. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மாகாண கல்வித்திணைக்களங்களே ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலுமிருந்து பாடசாலைகளை தெரிவு செய்தன.

(அதற்கான ஆதாரங்கள் உள்ளன)

ஆகவே இது அரசாங்கத்தின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.

மலையக சமூகத்தை பாராளுமன்றில்பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் தமது பிரதேசத்தில் தமிழ் பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்தியவர்களாக இரண்டு பேரை மட்டுமே என்னால் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

1) எம். சச்சிதானந்தன் (முன்னாள் பிரதி கல்வி அமைச்சர்)

2) எஸ்.இராஜரட்ணம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

முதலாமானவர் பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் பதுளை பிரதேசங்களில் தமிழ் தேசிய கல்லூரிகளை தரமுயர்த்த காரணமாக இருந்தார். இரண்டாவது பிரமுகர் (கண்டி மாவட்டம்) தனது காலத்தில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியை தரமுயர்த்தினார்.

இதற்கு அப்பாற்பட்டு நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ இருந்த எவருமே இங்குள்ள மாகாண பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்துவதற்கு எதிராகவே இருந்தனர். இதன் தாற்பரியம் விளங்காத ஒரு பிரதிநிதி ஒரு முறை நேர்காணலின் போது தும்புத்தடி வாங்குவதற்கும் மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பார்க்க வேண்டும் அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என என்னிடம் கூறியிருந்தார். (நேர்காணலை தேவைப்பட்டால் பதிவேற்றலாம்)

ஒரு கட்டத்தில் சில பாடசாலைகள். தேசிய கல்லூரிகளாக தெரிவு செய்யப்பட இருந்தன அதிபர்களிடம் அது தேவையில்லை என கடிதங்கள் எழுதி வாங்கப்பட்ட சம்பவமும் இங்கு தான் நடந்தது. எனவே தற்போது இந்த தேசிய திட்டத்தில் மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு மாத்திரமே சம்பந்தப்பட்டிருக்கின்றன.

எனினும் இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை கூட சிலர் முகநூலில் இதெல்லாம் நடக்காது ….படம் காட்டுகிறார்கள் என கிண்டல் மற்றும் கோபம் கலந்த பதிவுகளை இட்டு வருகின்றனர். அதற்குக் காரணம் உள்ளது.

ஏனென்றால் இதற்கு முன்னதாக இந்த சமூகத்துக்கென அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும் கிடைக்காமலிருக்கும் விடயங்கள் பல உள்ளன.

அதில் பிரதானமானது தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம்.

இரண்டாவது இந்த சமூகத்துக்கான தனி பல்கலைக்கழகம்.

மூன்றாவதாக தேசிய கல்லூரிகள் என்ற விடயம் உள்ளது.

முதலிரண்டும் கிடைப்பது பற்றிய நம்பிக்கைகளை இந்த சமூகத்திலுள்ளோர் இழந்து விட்டனர். அந்த விரக்தியினாலேயே அவ்வாறான எதிர்மறை கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு நான் கூற வந்த விடயம் முக்கியமானது.

இது அரசாங்கத்தின் கொள்கையாகும். அதிலும் குழறுபடிகளை ஏற்படுத்தி இந்த கல்லூரிகள் உருவாகாமல் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது இந்த பட்டியலில் உள்ள பாடசாலைகளை மாற்றும் விடயங்களை முன்னெடுக்காமலிருந்தாலே போதும்.

இறுதியாக…..

இந்த பதிவு யாருக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. இந்த விடயம் பற்றி இனி ஆக்கங்கள் எழுத இருப்பவர்களுக்கு சில தகவல்கள் மட்டுமே. மற்றும் படி இலங்கையில் தேசிய கல்லூரிகள் பற்றிய வரலாறு புள்ளி விபரங்கள் தேவைப்பட்டால் உள்பெட்டியில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Sivalingam Sivakumaran
(முகநூலில் இருந்து…)

Related Articles

Latest Articles