பதுளை மாவட்ட தமிழ் அமைப்புக்களின் கோரிக்கையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை, தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஊவா மாகாணத்தை மையப்படுத்தி பண்டாரவளை நகரில் கொண்டாடுவதற்கு ஆவன செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் புத்தசாசன, சமய விவகார, கலாசாரத்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழர்களின் உன்னதமான திருநாளாக தைப்பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறையும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் வருடந்தோறும் கொண்டாடப்படுகின்ற தேசிய தைப்பொங்கல் விழாவானது பெரும்பாலும் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் தமிழ் மக்களை பெரும்பான் மையாக கொண்டுள்ள ஊவா மாகாண தமிழ் மக்கள் தேசிய தைப்பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் தொடர்ந்தும் கைநழுவிப் போகிறது.
ஆகவே 2024ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை ஊவா மாகாணத்தை மையப்படுத்தி பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை நகரில் கொண்டாடுவதற்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பதுளை மாவட்ட தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊவா மாகாணத்தில் இம்முறை சமய மற்றும் கலாசார நிகழ்வோடிணைந்த தேசிய தைப்பொங்கல் விழாவை பண்டாரவளை நகரில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அது இந்த உற்சவத்தின் மகிமையை மேம்படுத்துவதுடன் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களும் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
ஆகவே ஊவா மாகாண தமிழ் மக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழாவை பண்டாரவளை நகரில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகத் தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம். செல்வராஜா, பதுளை










