தேசிய பொங்கல் விழாவை நல்லூரில் நடத்துகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றது. அதில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிலையில் 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் சிவன் கோயிலில் பிற்பகல் 3 மணிக்குப் பொங்கல் நிகழ்வு நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொங்கல் பானையில் அரிசியை போட்ட பின்னர், அங்கிருந்து துர்க்கா மணிமண்டபத்துக்கு மங்கல இசை முழங்க அழைத்துச் செல்லப்படுவார். அங்கு அரங்க நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கலந்துகொள்வதற்கான அழைப்பு அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles