உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளுக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் கோரியிருந்த 2 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவில் (280 கோடி) 53 மில்லியன் ரூபா லட்சம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த தொகை அத்தியாவசிய செலவுகளுக்குகூட போதுமானதாக இல்லை என்பதால், மேலதிக நிதியை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோருவதற்கு பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
பொலிஸ் திணைக்களவும் முன்வைத்துள்ள செலவு மதிப்பீட்டு அறிக்கையில், தேர்தலுக்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கே அதிக செலவு கணிக்கப்பட்டுள்ளது. அதற்காக 745 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது.
பொலிஸ் வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 675 மில்லியன் ரூபாவும், பொலிஸ் அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள், தங்குமிட கொடுப்பனவுகள், ஊக்கத்தொகைகள் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மேலும் 500 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலுக்காக பொலிஸார் கோரும் தொகை 328% அதிகரிப்பை காட்டுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் வினவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
