தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் இடையூறாக இருப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடனான உறவை துண்டித்து உள்ளன. இதனைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை அடிமைப் படுத்திக் கொண்டு காரியம் சாதிக்க எதிர்பார்க்கின்றன.
தோட்டத் தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்களுக்கும் குறைவான நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை அளவை அதிகரித்து குறைந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் கைக்காசு முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்றன.

இதன்போது பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற அடிப்படையில் தோட்ட நிர்வாகத்தினால் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தை நிறுவை செய்யும்போது தோட்ட நிர்வாகங்கள் பாரிய மோசடி செய்யப்படுகின்றன. 20 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளி ஒருவரிடம் இருந்து ஆறு கிலோ கொழுந்தை கழித்து வருகின்றன.
இதன் காரணமாக 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை எந்த ஒரு தொழிலாளியும் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியாக பெற்றுக் கொடுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை தோட்ட நிர்வாகங்கள் தற்போது வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் தோட்டங்களை பராமரிக்கின்ற முறையை தோட்ட நிர்வாகங்கள் பெரும்பாலும் கைவிட்டுள்ளன. உரமிடுதல் மருந்து தெளித்தல், புல் வெட்டுதல் , சுத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேயிலை விளைநிலங்கள் காடுகளாக மாறி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு எதிரான தோட்ட நிர்வாகங்களின் போக்குகளைத் தொழிற்சங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண முடியாத சூழ்நிலை நாட்டிலே ஏற்பட்டு இருக்கின்றது.
ஆகவே நாட்டிலே உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பிறகு தொழிலாளர் தேசிய சங்கமானது அதன் தலைவர்களுடைய ஆலோசனைக்கேற்ப ஒவ்வொரு தோட்டங்களுக்கும் தொழிற்சங்க பணியாளர்கள் அனுப்பி தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
