மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது, எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த 350 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தொழிலாளர்களுக்கு அவசியம், எனினும், ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த முயற்சிக்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
இதற்கு மேலதிகமாகவே அரசாங்கம் நிவாரணக் கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சம்பள விடயத்தில் மலையக தொழிற்சங்கமொன்று தன்னிச்சையாக செயற்படுகின்றது என குற்றஞ்சாட்டிய அவர், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பேச வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
