யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அஞ்சலி மேற்கொள்வதற்காகச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் இடைமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
திலீபனின் நினைவிடத்துக்கு அமைச்சர் சந்திரசேகர் சென்றதும், அங்கு நின்ற பலர் அமைச்சரைச் சூழ்ந்துகொண்டு அவரை அஞ்சலிக்க விடாமல் தடுத்ததுடன் உடனடியாகத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினார்கள்.
இறுதிவரை அவர்கள் சமாதானம் ஆகாததால் அமைச்சர் சந்திரசேகர் அவ்விடத்தை விட்டு விலகிச்சென்றார்.
திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வு பொதுவானது. அங்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்தலாம். அத்துடன் அமைச்சர் ஒருவர் திலீபனை அஞ்சலித்தால், அது ‘திலீபன் ஓர் அஹிம்சைப் போராளி என்பதற்கான ஆதாரமாகவும் அடையாளமாகவுமே அமையும்.
அத்துடன், எதிர்காலத்தில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தடைபோட பொலிஸார் எத்தனித்தால், இவ்வாறான சம்பவங்கள் நீதிமன்றத்தில் தமிழர் தரப்புக்கான பிடிமானங்களாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறிருக்கையில் பரந்துபட்ட பார்வை இல்லாமல் தொலைநோக்குச் சிந்தனை இல்லாமல் இராஜதந்திர அணுகுமுறை இல்லாமல் அமைச்சரை வெளியேற்றிய ஏற்பாட்டாளர்களின் செயற்பாட்டுக்குப் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.