நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்திய நிலையத்திற்கு தண்ணீர் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் அங்குள்ள வைத்தியரின் அசமந்த போக்கேயாகும் என்று நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நானுஒயா பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பிரிவு கட்டிடமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியுடன் அமைக்கப்பட்டதாகும். அந்த கட்டிடமானது எந்த விதமான அனுமதியும் இன்றி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டபோது அது தொடர்பாக உரிய வரைபடங்களை நுவரெலியா பிரதேச சபையில் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு நாங்கள் கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.
ஆனால் அவர்கள் கட்டிட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து சிறிது காலத்தின் பின்பே அதற்கான வரைபடத்தை எங்களிடம் சமர்ப்பித்தார்கள். எனவே அதற்கு ஒரு தண்டப்பணம் அறவிடுவது பிரதேச சபையின் நடைமுறையாகும். அதற்கான தண்டப்பணமாக 96000.00 ரூபா அறவிடுவதற்கு தீர்மானித்து அதனையும் கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.
ஆனால் அவர்கள் அந்த பணத்தை இதுவரையில் கட்டவில்லை.எனவே அந்த குறித்த வைத்தியசாலை கட்டிடத்திற்கு எங்களுடைய பிரதேச சபை ஊடாக சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியாத காரணத்தினால் அதற்கான நீர் வசதி துண்டிக்கப்பட்டது.இது அரசாங்கத்தின் நடைமுறையாகும்.
தனியாராக இருந்தாலும் அரசாங்க கட்டிடமாக இருந்தாலும் குறித்த தொகை செலுத்த வேண்டியதும் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.இதனை மீறியே அவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.அவர்கள் குறித்த பணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார்களானால் அவர்களுக்கான நீர் வசதியை பெற்றுக் கொடுக்க முடியும்.
நாங்களும் பிரதேச சபை என்ற வகையில் பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இங்கு இருக்கின்றோம்.எனவே சுகாதார துறையை சார்ந்தவர்களும் அதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டால் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது.
ஆனால் ஒருசிலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படுவதன் காரணமாகவே இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.நீர் வசதி நாதுண்டிக்கப்பட்டமைக்கு இதுவே முக்கிய காரணம் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு