“காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்.” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.
இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. காசா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ”காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் கலீல் அல் ஹயா கருத்து வெளியிடுகையில்,
‘ அரசியல் காரணங்களுக்காக தற்காலிக போர் நிறுத்தங்களை இஸ்ரேல் கையில் எடுக்கிறது.
இதற்கு இனி ஹமாஸ் ஒப்புக்கொள்ளாது. போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே மீதமுள்ள பிணைக்கைதிகள் 59 பேரை விடுவிப்போம்.” – என தெரிவித்துள்ளார்.
இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஹமாசுக்கு எதிராக காசாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.