இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் சமையல் எரிவாயு கிடைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே, மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலாவது சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டைகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (3) இடம்பெற்றது. இதில் தலைமை வகித்துப் பேசும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கடந்த ஒரு மாத காலமாக சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும் கூட அதைப் பெற்றுக் கொள்வதில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். எரிவாயு சிலிண்டர்கள் வந்து இறங்கியயவுடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தாராளமாக விநியோகம் இடம்பெறுமாயின் நுகர்வோரின் பிரச்சினைகள் ஓரளவு தீர்ந்து விடும். குறைந்தளவு விநியோகம் இடம்பெறுவதால் தினசரி எரிவாயு ஏற்றி வரும் வாகனங்களை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கிடப்பதோடு, மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதிலும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.
மக்களின் சிரமங்களை உறுப்பினர்கள் அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். தோட்டங்களில் சம்பளம், பண்டிகை முற்பணம் போன்றவை வழங்கப்பட்டு வந்தாலும், தேவையான உடுதுணிகள், பலசரக்கு சாமான்கள் முதலானவற்றைக் கொள்வனவு செய்ய கையில் பணம் இருந்தாலும், சமைத்துச் சாப்பிடுவதற்கும் பண்டிகைக்கு பலகாரம் பச்சடிகளை தயார் செய்து விருந்தினர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கும் சமையல் எரிவாயு கிடைக்காவிட்டால் உண்மையான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே, கொட்டகலை பிரதேச சபையில் அரசாங்கத்தின் சார்பில் அங்கம் வகிக்கும் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்குக் கொண்டு வந்து சமையல் எரிவாயு விநியோகத்தை துரிதப் படுத்தவும், நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அத்தோடு, தித்வா புயலில் கொட்டகலை பிரதேசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டது. நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உறுப்பினர்கள் காலம் தாழ்த்தாது இந்த மாதம் முடிவதற்கும் செய்து முடித்து கணக்கு விபரங்களை சமர்ப்பித்தால் கிடைத்த நிதி திறைசேரிக்கு திரும்பிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். விபரங்களை பிரதேச சபைக்கு முன்னுரிமை கொடுத்து சமர்ப்பித்தால், தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
