பசறை விபத்து – படுகாயமடைந்த மற்றுமொரு நபரும் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை- மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய மீதும்பிட்டி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குறித்த இளைஞனின் தந்தை (வயது 50) படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பதுளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பசறை பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டதால் பின்னால் சென்ற லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles