அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மத்தியில் ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.
இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது.
கடந்த 7-ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். இதில் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வீடு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது. தற்போது அவர் அந்த வீட்டில் இல்லை. எனினும் அவரது வீட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
காட்டுத் தீயில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஒவ்வொரு நிமிடத்துக்கும் 5 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு தீ பரவுகிறது. இப்போதைய நிலையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 7,500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஹெலிகாப்டர்கள், சிறப்பு விமானங்கள் மூலமும் தண்ணீர் வாரியிறைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.