முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப் பெரும மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தாக்குதலை நடத்தியோர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
களுத்துறை, மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைந்ததாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அது தொடர்பில் கண்காணிப்பதற்காக பாலித்த தெவரப்பெரும குறித்த இடத்திற்கு சென்றபோது தாக்கப்பட்டார்.
மக்களின் பிரச்சினைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் பாலித்த தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் உள்ள மக்களுக்கு இன, மத பேதமின்றி பணியாற்றும் பாலித்த தெவரப்பெரும மீது நடத்தப்பட்ட தாக்குதல் கட்சி பாகுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.