புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என, வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதே வேளை, 13வது திருத்தத்தை மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவுடன் பகைத்துக் கொண்டு அல்லது சீனாவுடன் ஒன்று சேர்ந்து எதையும் சாதிக்க முடியாது என குறிப்பிட்ட அவர், பூகோள ரீதியில் இந்தியா எமக்கு மிகவும் அண்மித்த முக்கிய நாடு என்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான முதலாம் நாள் பாராளுமன்ற விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இனவாதம் இல்லாத நாடு ஒன்று அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய மக்கள் சக்தி இந்த அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இது, அனைவரும் பாராட்டக்கூடிய விடயமாகும்.
இம்முறை தேர்தலில் வாக்களிப்பும் இன பாரபட்சம் இல்லாத வகையிலேயே நடந்துள்ளது. இது தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே எமது புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.










