புலம்பெயர் தொழிலாளருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘மனுஷவிய’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி ஓய்வூதியத் திட்டம் நேற்றைய தினம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர்,

எமது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல் மக்கள் எதிர்கொண்டநெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவே நாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

எமது நடவடிக்கைகளால் நாட்டில் நிலவிய நெருக்கடிகளுக்கு ஓரளவாயினும் தீர்வு காண முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு வெளிநாடுகளில் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கே இந்த புதிய ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்ளடங்குகின்றனர்.

Related Articles

Latest Articles