பெருந்தோட்ட தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்தல்: தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?

கடந்த வார இறுதியில் மூன்று முக்கிய விடயங்கள் எமது பதிவுக்குள்ளாயின. அவை மூன்றும் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.

தமிழ்நாடு அரசு வழங்கிய உணவுப் பொருட்கள் பங்கீடு, பிரதமர் ரணிலின் அபாய அறிவிப்பு, அதனையொட்டியதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு விடுத்துள்ள உத்தரவு என்பனதான் அந்த அவதானத்துக்குரிய சங்கதிகள்.

தமிழ்நாடு அரசு நல்லெண்ண மனப்பான்மையுடன் இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் வழும் குடும்பங்களுக்கு விநியோகிக்கவென அரிசி, பால்மா, மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

அவர் கூறியபடியே பொருட்களும் வந்து சேர்ந்துள்ளன. இனி வரவும் போகின்றன. இந்நிவாரணப் பொருட்களை கிராம அதிகாரிகளுக்கூடாக வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதில் இப்போது பிரச்சினை எழுந்துள்ளது. இது எழுதப்படும் வரை கிராம அதிகாரிகள் சங்கம் இந்த விநியோக நடவடிக்கையிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தது. அவ்வாறே செய்துள்ளது. பொருட்கள் விநியோகத்தில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் அச்சுறுத்துவது போல பேசுகிறார் என்று காரணம் கூறி கைநழுவிக் கொண்டுள்ளது கிராம அதிகாரிகள் சங்கம்.

ஜீவன் தொண்டமான் தலையீடு செய்தது உண்மைதான். ஆனால் அது நியாயமான தலையீடு. பெருந்தோட்டத் துறையில் வாழும் சகலரும் குறைந்த வருமானம் பெறுபவர்களே என்பதில் ஐயமில்லை. எனினும் தொழில்சார் ரீதியில் இதில் 80 சதவீதமான குடும்பங்கள் வருமானம் குறைந்தோர் பட்டியலில் உள்ளடக்கப்படுவது இல்லை. ஓய்வுூதியம் பெற்றோர், வேலையற்றோர் என்று 20சத வீதமானோர் மட்டுமே வருமானம் குறைந்தவர்களாக கணிக்கப்படுகின்றனர்.

இந்த அடிப்படையிலேயே தமிழ் நாடு அரசு அனுப்பிவைத்துள்ள உணவுப் பொருட்கள் விநியோகத்துக்கு தகுதியுடையவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தான் ஜீவன் தொண்டமான் எதிர்த்தார். தோட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தி இருந்தார். இது சம்பந்தமாக விளக்கமொன்றை இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகங்கள் மூலம் தந்திருந்தார். எனினும் கிராம அதிகாரிகள் சங்கம் விநியோகத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது. தற்போது பிரதேச செயலகங்கள் மூலம் மேற்படி விநியோகம் இடம் பெறுகிறது.

பெருந்தோட்ட மக்களை வருமானம் குறைந்தோர் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் அவசியம். இ.தொ.காவும், த.மு.கூட்டணியும் இதில் முனைப்புடன் ஈடுபடுவது முக்கியம். இதே போது சில இனவாத சக்திகள் ஸ்டாலின் உணவுப் பொருட்களை கொடுத்துவிட்டு கச்சத்தீவை கேட்பதாக பேசிவருகின்றனர். மனிதாபிமானம் வேறு. அரசியல் வேறு. இரண்டையும் போட்டு குழப்புவது நல்லதல்ல.

இனி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அபாய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளமையைப் பார்ப்போம். எதிர்வரும் நாட்களில் மக்கள் தினம் ஒன்றுக்கு இரு வேளை உணவு மட்டுமே சாப்பிட நேரிடலாம் என்கிறார் பிரதமர் ரணில். அவர்தான் நிதியமைச்சரும் கூட. மக்கள் பட்டினிக் கிடக்கப் போவதை பகிரங்கமாக பிரதமரே எச்சரிக்கை விடுக்கிறார். இப்பொழுதே இருவேளை சாப்பாட்டினை முழுமையாக சாப்பிட முடியாத படி மக்கள் பரிதவிக்கிறார்கள். உணவு நெருக்கடி பெருந்தோட்ட மக்களைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற இன்னும் முடியாதுள்ளது. எரிபொருள் பிரச்சினையால் பெருந்தோட்டத் தொழிற்சாலைகள் சீராக இயங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தோட்ட மக்களின் வேலை வாய்ப்பினை பெரிதும் பாதித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய உத்தரவு ஒன்றை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதாவது பெருந்தோட்டப் பிரதேசங்களில் பயன்படுத்தப்படாத தரிசு காணிகளைக் கண்டறிந்து உனவுப் பொருட்களைப் பயிரிட பகிர்ந்தளிக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார் அவர்.

23 கம்பனிகள் வசம் பெருந்தோட்டங்கள் உள்ளன. எனினும் முறையான பராமரிப்பின்றி பெரும்பாலான காணிகள் கைவிடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் 30சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் இவ்வாறு காடாக்கப்பட்டுக் கிடக்கின்றன என்பது அவதானிகளின் பதிவு. ஏலவே இவ்வாறான காணிகளை தனியார் மற்றும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவது என்பதிலேயே கம்பனி தரப்பு கவனம் செலுத்தி வந்துள்ளது. தவிர தோட்டக் காணிகளில் அத்துமீறிய வெளியார் குடியேற்றங்கள் இடம் பெறுவதாக தகவல்கள் உள்ளன.

ஏற்கனவே கைவிடப்பட்ட காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட உதவ வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இனவாத கண்ணோட்டத்துடன் இதனை நோக்கும் அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக இதுவரை எதுவுமே ஆகவில்லை.

விவசாயம் செய்வதற்கும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் இக்காணிகள் தோட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் இன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில் வேலைவாய்ப்பின்மைக்கு வடிகால் தேடியிருக்கலாம். வருமானத்துக்கு வழி செய்திருக்கலாம்.

தற்போது ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் பெருந்தோட்ட தரிசு நிலங்களில் உணவுப்பொருட்களைப் பயிரிடுவதற்க்கான வேலைத் திட்டங்கள் உருவாக்கம் பெறப்போகின்றன. ஏறக்குறைய 9000 ஹெக்டேயர் தரிசு காணிகள் இங்கு காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. இக்காணிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்கள் இனம் காணப்பட உள்ளன. தவிர இக்காணிகளில் விவசாயம் செய்வோருக்கு எரிபொருள், பசளை விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்னும் உறுதியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

காணியை யார் யாருக்கு வழங்குவது என்பதை அதிகாரிகளே முடிவு செய்யப்போகிறார்கள். இப்போதுள்ள சிக்கல் என்னவெனில் முன்னுரிமை யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதுதான். அரச அதிகாரிகள் சிலர் பெருந்தோட்ட விவகாரங்களைக் கையாளும் சந்தர்ப்பத்தில் எல்லாம் இனவாத கண்ணோட்டத்துடனேயே செயற்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆக பெருந்தோட்ட தரிசு நிலங்கள் பகிர்ந்தளிக்கும் நிலையில் தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்னும் ஐயம் எழுவது இயல்பே.

ஜனாதிபதியின் தரிசு நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் பணிப்புரை காலத்தின் தேவையை கருத்தில் கொண்டது தான். எனினும் அதில் பயன்பெற வேண்டிய சமூகம் பற்றியும் அவர் கவனம் செலுத்துவதே உசிதமானது. இதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பிப்பாரா ஜனாதிபதி!.

இதில் த.மு. கூட்டணியும், இ.தொ.காவும் உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள உணவுப்பொருள் விநியோகத்தில் தோட்ட மக்களுக்கு உரிமை கோருவதைப் போல இக்காணி விவகாரமும் முக்கியமானது. பகிர்ந்தளிக்கப்பட போகும் தரிசு காணிகள் தற்காலிக தேவைக்கா அல்லது நிரந்தர உரிமைக்கா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. எதுவாயினும் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசு நிலங்களைப் பகிர்ந்தளித்து இளைஞர்களை ஊக்குவிப்பது மிகமிக அவசியம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles