” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விரைவில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படும், அனைத்து மலையக தமிழ் எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு இந்த சந்திப்பு நடத்தப்படும்.”
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
” எமது ஆட்சிகாலத்தில்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, அவர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் இன்னும் இரு வாரங்களுக்குள் மலையகத்தில் உள்ள தமிழ் எம்.பிக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளோம். சம்பள உயர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்படும்.” – எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.










