‘பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த நிலையான கொள்கைத் திட்டம் அவசியம்’

பெருந்தோட்டத்துறையை கட்யெழுப்புவதற்கான நிலையான கொள்கைத்திட்டங்களை வகுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத்துறை தொடர்பில் இந்த நாட்டிலே 30, 40 வருடங்களாக தெளிவானதொரு கொள்கைத்திட்டம் இருக்கவில்லை. ஆட்சிமாற்றங்கள் ஏற்படும்போது அமைச்சர்கள் தன்னிச்சையாக செயற்படும் நிலைமையே காணப்பட்டது.  தங்களுக்கு ஏற்றவகையில் கொள்கைகளை மாற்றிக்கொண்டனர். இதனால் இத்துறையை மீளக்கட்டியெழுப்பமுடியாமல்போனது.

எனவே, நிலையான திட்டங்களை வகுத்து பெருந்தோட்டத்துறையை வெற்றிகரமான துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். துறைசார் விடயத்தில் அனுபவமுள்ள அதேபோல இளம் அமைச்சர் என்ற வகையில் ரமேஷ் பத்திரண இதனை செய்வார் என நம்புகின்றோம்.

அத்துடன், அமைச்சரவை அனுமதியுடன் மலையக மக்களுக்கு எமது ஆட்சியின்போது 7 பேர்ச்சஸ் காணி வழங்கினோம். லயன் யுகத்திலிருந்து எமது மக்களை விடுவித்து, நில உரிமையாளர்களாக்குவதே எமது திட்டமாக இருந்தது. இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் பேசப்படுகின்றது. அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles