பெருந்தோட்டப் பகுதி தரிசு நிலங்களை தனியாருக்கு வழங்குவது மோசமான துரோகம்

“பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி தனது ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் அளித்துவிட்டு, இன்று அக்காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளமை மோசமான துரோகமாகும். இதனை உடனடியாக நிறுத்தித் தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்குப் பிரித்து வழங்கும் ‘மலையக வாழ்வாதாரக் காணிக் கொள்கையை’ அரசு அறிவிக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-

“பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி தனது ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் அளித்துவிட்டு, இன்று அக்காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளமை மோசமான துரோகமாகும். இதனை உடனடியாக நிறுத்தித் தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்குப் பிரித்து வழங்கும் ‘மலையக வாழ்வாதாரக் காணிக் கொள்கையை’ அரசு அறிவிக்க வேண்டும்.

மலையக மக்களின் 200 வருட காலப் பங்களிப்பைக் கருத்திற்கொண்டு வதிவிடக் காணியாகக் குறைந்தபட்சம் 15 பேர்ச் என்ற ‘மலையக வதிவிடக் காணிக் கொள்கை’ உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் கம்பனிகள் தன்னிச்சையாகக் கொழுந்து மற்றும் இறப்பர் எடையை உயர்த்தியிருப்பதைத் தடுத்து, ஒரே வேலைக்கு ஒரே சமமான சம்பளத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக அகற்றுவோம் என எங்களுடன் சேர்ந்து போராடிய ஜனாதிபதி, இன்று அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டத்தைக் கொண்டுவர முயல்வது தவறானது. புதிய சட்ட வரைவையும் பழைய சட்டத்தையும் அரசு முழுமையாக அகற்ற வேண்டும்.

வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

அத்துடன், மலையக மக்களின் காணி உரிமை, வதிவிட உரிமை, சம்பளப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி உள்ளடங்கலாக 15 பிரதான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், வரவு – செலவுத் திட்ட உரையில் இதற்கான தெளிவான தீர்வுகளை அரசு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles