பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை இந்திய மத்திய அரசு தொடர்கிறது.
அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் திகதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, தூதரக உறவு துண்டிப்பு, விசா மறுப்பு என, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, மேலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாளில் மூன்று அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, அந்த நாட்டில் இருந்து எந்த ஒரு இறக்குமதிக்கும், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும் அனுமதி மறுப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்தது.
ஏற்கனவே, 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 200 சதவீத வரியை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஏற்கனவே மிக மிக குறைந்த அளவே இருந்தது.
அதுவும், உலர் பழங்கள், ஹிமாலயன் உப்பு போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
பாகிஸ்தானில் இருந்து, தபால் அல்லது பார்சல்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, மத்திய தொலைதொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.