போராட்டக்காலத்தில் பொன்சேகாவுடன் சவேந்திர சில்வாவுக்கு தொடர்பு – விமல்

இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் (அறகலய) பின்னணியில் அமெரிக்க தூதுவரே பிரதான வகிபாகத்தை வகித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடாக அப்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டோரின் ஆதரவையும் பெற்றிருந்தார் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் மிரியான வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இராணுவத்தை அனுப்புமாறு அப்போதைய தளபதி சவேந்திர சில்வாவுக்கு, கோட்டாபய ராஜபக்ச தகவலுக்கு மேல் தகவல்களை அனுப்பியுள்ளார். அன்றைய தினம் சவேந்திர சில்வா, ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

கோட்டாவின் உயிருக்கு ஆபத்து என்ற தகவலை அவரின் பிரத்தியேக செயலாளர் ராஜபக்ச குடும்பத்துக்கு வழங்கியிருந்தார். இப்படியான அச்சுறுத்தலான சூழ்நிலையே காணப்பட்டது. ஆனால் மறுநாள் அதிகாலைதான் ஜனாதிபதியை (கோட்டாவை) சந்திக்க சவேந்திர சில்வா சென்றிருந்தார். மே – 9 முதல் அதன் பின்னரான காலப்பகுதியில் சவேந்திரவின் செயற்பாடுகளில் மாற்றங்கள் தென்பட்டன.

மற்றுமொரு சம்பவத்தையும் குறிப்பிடுகின்றேன். அதுவும் மிக முக்கியமான நாளொன்று. இராணுவத்தில் உயர் பதவி வகிப்பபவர் ஒருவர், தனது வாகனம் பழுதடைந்து விட்டதால், சவேந்திர சில்வாவின் வாகனத்தில் சென்றுள்ளார். இருவரும் செல்ல வேண்டியது ஒரு இடம்தான்.

அவ்வாறு செல்கையில் சவேந்திர சில்வாவுக்கு 13 அழைப்புகள் வந்துள்ளன. அவரும் ‘இயஸ் சேர், இயஸ் சேர் எனக் கூறி, அழைப்பை எடுப்பது யாரென வெளியில் காட்ட முற்படவில்லை. சவேந்திர சில்வாவுக்கு இவ்வாறு அழைப்பை எடுத்தவர் சரத் பொன்சேகா. சவேந்திர சில்வாவை மட்டுமல்ல இராணுவத்தில் இரண்டாம் நிலையில் உள்ள பிரதானிகளையும் வளைத்துபோட பொன்சேகா முற்பட்டிருந்தார்.

பொன்சேகாவை இயக்கியது அமெரிக்க தூதுவர். அதனால்தான் அறகலய பூமிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பொன்சேகாவால் மட்டும் போய்வரக்கூடியதாக இருந்தது.” – என்றார்.

Related Articles

Latest Articles