மத ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கும் தருணத்தில், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றது.
மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயற்சித்துவருகின்றனர்.
தனி நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ மதவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அல்லது அதே நோக்கத்துடன் செயல்பட முயற்சித்தால் அவர்களுக்கெதிராக, அரசியலமைப்பின் 9 சரத்து மற்றும் தண்டனைச் சட்டத்தின் 291 (அ), (ஆ) இன் பிரகாரம் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தப்படும்.” – எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.










