நாடு முழுவதிலும் 719 மசாஜ் நிலையங்கள் இயங்குகின்றமை கண்டறியப்பட்டுள்ளதோடு, அதில், 108 மசாஜ் நிலையங்கள் நுகேகொடையிலும் திருகோணமலை, நிக்கவரெட்டிய, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய நகரங்களில் தலா இவ்விரண்டு மசாஜ் நிலையங்களும் உள்ளனவென, புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நகரங்களில் எந்தவொரு மசாஜ் நிலையமும் இல்லை. அதேபோல, கிழக்கு மாகாணத்தில் 13 மசாஜ் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதில், மட்டக்களப்பில் 6 நிலையங்களும் அம்பாறையில் 5 நிலையங்களும் திருகோணமலையில் இரண்டு நிலையங்களும் உள்ளன. கந்தளாயில் எந்தவொரு நிலையமும் இல்லையென, அந்த புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்திடம் தமிழ் மிரர் கோரியிருந்தது. 2019ஆம் ஆண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியில் கிடைத்த தரவுகளிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு முரணாக, கோரப்பட்ட மொழியில் தகவல்களை வழங்காது, சிங்கள மொழியில் வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் 719 மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு மசாஜ் நிலையங்களும் இல்லை.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்துக்கும் குறைவான மசாஜ் நிலையங்களே காணப்படுகின்றன.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் 13, ஊவா மாகாணத்தில் 32, சப்ரகமுவ மாகாணத்தில் 36, வடமேல் மாகாணத்தில் 49, மத்திய மாகாணத்தில் 56, வடமத்திய மாகாணத்தில் 60, தென் மாகாணத்தில் 119, மேல் மாகாணத்தில் 354 மசாஜ் நிலையங்களும் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களில் சுமார் 50 சதவீதமான மசாஜ் நிலையங்கள் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றன, அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நன்றி – தமிழ்மிரஸ்
பா.நிரோஷ்