காசா மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக ஆழமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நிலையில், எதிரிகளின் கொடூரமான செயல்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என இஸ்ரேல் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பலத்தை புரிந்துக்கொண்ட இஸ்ரேல் காசா எனும் பகுதி முற்றிலுமாக தடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “எதிரிகள் செய்த கொடூரமான செயல்களை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். வேதனையும், துயரமும் நிறைந்த இந்த இருண்ட நாளில் நம் மக்களின் வீர செயல்கள் இஸ்ரேல் வரலாற்றின் ஓர் அங்கமாக மாறும். நாங்கள் எதிரிகளை முழு பலத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கி வருகிறோம். அவர்கள் செய்த தவறுக்கு தற்போது விலை கொடுக்க தயாராகியுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் உலக தலைவர்கள் எங்களுடன் பேசியிருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேல் சர்வதேச ஆதரவை பெற்றிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
