“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று

மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார்.                                                                                                                                                                                       சமகால மலையக அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வறிஞருமான அ.லோரன்ஸ் கண்டி பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த அந்தோனி மரியா ஆரோக்கியம் அவர்களின் ஐந்தாவது புதல்வராக பிறந்த லோரன்ஸ் அவர்கள் ஆரம்ப கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசிரியார் கல்லூரியிலும் உயர் கல்வியை அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார்.                                                                                                                                                                                                          1975-1979 காலப்பகுதியில் கொழும்பு பல்கலைகழகத்தில் அபிவிருத்தி கல்வியில் சிறப்பு பட்டம் பெற்றார்;. அதனை தொடர்ந்து இளைஞர் வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் மாவட்ட இளைஞர் சேவை அரசாங்க அதிகாரியாக கடமையாற்றினார். 1989 ம் ஆண்டளவில் மலையக மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.                                                                                                                                                                                                            இக்கட்சி ஆரம்பிக்க முன்னரே லோரன்சுக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாப தலைவர் சந்திரசேகரன் ,அதன் பொதுச்செயலாளர் காதர்,நிதிச் செயலாளர் சரத் அத்துகொரல ஆகியோரிடம் நட்பு இருந்தது. லோரன்ஸ் அவர்கள் 1991 ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியில் அங்கத்தவராக இணைந்து அரசியலில் ஈடுப்படடார்.1993 ம் ஆண்டளவில் தனது மாவட்ட இளைஞர் சேவை அரசாங்க அதிகாரி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு மலையக மக்கள் முன்னணியில் முழுநேர அங்கத்தவராக செயற்பட தொடங்கினார்;.                                                                                                                                                                              மலையக மக்கள் முன்னணியின் முதலாவது அரசியல் பீடத்தின் உறுப்பினராக 1995 ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் கட்சியின் உபதலைவராகவும் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் செயற்பட்டார். 2010 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த விஜயகுமாரின் மறைவின் பின்னர் அதே மாதம் 19 ம் திகதியிலிருந்து கட்சியின் செயலாளராக செயற்பட்டு வந்தார். மேலும் அண்மையில் ஜனநாயக முன்னணி,மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் செயற்பட்டார். அதன்பின்னர் அவர் இறக்கும்வரை மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவராக செயற்பட்டார்.

மலையக மக்கள் முன்னணி மிக தெளிவாக கொள்கைகளை கொண்டு ஆரம்பிக்கப்;பட்டது. மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக மதிக்கப்பட வேண்டும். 15 லட்சம் மலையக தமிழர்களுக்கு இந்நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களுக்கு மத்தியில் ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.                                                                                                                                                                  மலையக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயற்பட்டவர் லோரன்ஸ் அவர்கள். மலையக மக்களை தேசிய இனமாக பிரகடனப் படுத்த வேண்டும்,மலையக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை 16 ஆக உயர்த்த வேண்டும்,உள்ளுராட்சி சபைகள் அமைக்கப்பட வேண்டும்,பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும்,லயன் முறையை முற்றாக ஒழித்து தனி வீட்டுத் திட்;டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் ,மலையகத்தில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனோடு இணைந்து முன்வைத்தவர் லோரன்ஸ்.                                                                                                                                                         இதனை கட்சியின் முக்கிய ஆவணங்களாகிய மேதின பிரகடனம்,தேர்தல் விஞ்ஞாபனம்,கொள்கை பிரகடனம் என்பவற்றில் மிக தெளிவாக மலையக மக்கள் முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில் முதன் முதலாக தனி வீட்டுத் திட்டத்தை அட்டன் செனன் தோட்டம்,இரத்தினபுரி பெல்மதுரை,பதுளை யூரி தோட்டம் ஆகியவற்றில் ஆரம்பித்தனர்.                                                                                                                                                                300 படித்த இளைஞர் யுவதிகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் அரச நியமனங்கள் வழங்கினர். மலையக மக்கள் முன்னணி கட்சியின் வீழ்ச்சி என்று பார்க்கும்போது கட்சியின் சில அடக்குமுறை காரணமாக மலையக மக்கள் முன்னணியின் வளர்;ச்சி ஒரு சீராக இல்லாமல் சில காலங்களில் உயர்ந்த நிலையிலும் சில காலங்களில் சில பிரச்சினைகளும் தோன்றியிருந்தன.இது ஒரு உயிரோட்டமுள்ள கட்சிக்கு எதிப்பார்க்க கூடியதுதான்.கட்சியிலே முரண்பாடுகள் இல்லாமல் இருக்க முடியாது கருத்து முரண்பாடுகள் இருக்கவேண்டும் ஆகவே இதனை மாவோ அவர்கள் கூறியிருக்கின்றார்கள் 100 பூக்கள் மலரட்டும் 100 சிந்தனைகள் மோதட்டும் என்று ஆகவே மலையக மக்கள் முன்னணியில் கருத்து முரண்பாடுகள் இருந்தன.                                                                                                                                                           இருந்தும் கூட மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி ஒரு முக்கியமான கட்சியாகவும் யாராலும் மறுக்க முடியாத சக்தியாக திகழ்கின்றது என்று பெருமையுடன் கூறியவர் அதன் செயலாளர் நாயகம் லோரன்ஸ் அவர்கள். நாங்கள் விதைத்த விதைகள் தான் இன்று மரமாக வளர்ந்து பூ பூர்த்து காய் காய்த்து பழம் தருகிறது. லயன் முறைகளை ஒழித்து தனி வீடுகள் அமைத்தல்,அரசியல் தீர்வு, உள்ளுராட்சி சபைகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளமை எமக்கு கிடைத்த வெற்றி என அமரர் லோரன்ஸ் பல மேடைகளில் கூறியிருக்கின்றார். மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.காணி உரிமை வழங்கப்பட வேண்டும்,கிராம சேவகர் பிரிவு விரிவாக்கம்,அரச உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்,இலங்கையின் நிர்வாக சேவை,கல்வி நிர்வாக சேவையில் மலையக தமிழர்கள் வரவேண்டும். பெருந்தோட்ட பொருளாதாரம் மாறும் காலகட்டம் காணப்படுகின்றது.                                                                                                                                                                                                                                                  கம்பனிகள் முறைகளை கொண்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தை எதிர்காலத்தில் கம்பனியினர் ஊடாக செய்ய இயலாமல் போகலாம். கம்பனிகள் தோட்ட முகாமையாளர்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்குகின்றது; உதாரணமாக ஒரு தோட்ட முகாமையாளருக்கு கூடிய கல்வி அறிவு இல்லை. அவர்கள் தங்களை விளையாட்டுத்துறையில் அடையாளப்படுத்திக்கொண்டு தோட்ட நிர்வாகங்களை நிர்வகிக்க வந்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு வைத்திய நிபுணர்,பொறியியலாளர் வாங்கும் சம்hளத்தைவிட பல மடங்குகள் சம்பளம் வாங்குகின்றார்கள்.இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.                                                                                                                                                                                இலங்கையில் தெற்கு பகுதிகளில் சிறுவுடமைகள் மக்களிடம் காணப்படுகின்றது.இதனூடாக அவர்கள் இலாபம் அடைகின்றனர். எனவே மலையகத்திலும் தேயிலை காணிகளை ஒரு நபருக்கு அரை ஏக்கர் வீதம் சொந்தமாக வழங்க வேண்டும்.இதனுடான மூன்று தலைமுறையினர் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மலையக மண்ணில் சிறப்பாக வளர கூடிய பயிர் தேயிலை ஒரு வருடத்தில் அதிக இலாபம் ஈட்டக்கூடியதும் தேயிலை பயிராகும்.எனவே புதிய முகாமைத்துவ முறையில் சிற்றுடமைகளை உருவாக்க முடியும்.                                                                                                                                                          இதனால் தொழிற்ச்சங்க பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்ய விவசாய அமைப்புகளை உருவாக்கலாம்.தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தல், தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல்,நேரடியாக தொழிலாளர்களை கட்சி அங்கத்தவர்களாக உருவாக்குதல் போன்றன சிறந்தவையாகும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தவர் அமரர் லோரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் உடல் மறைந்தாலும் அவரின் செயற்பாடுகள் அனைத்தும் மலையக மக்களிடையே நிலைத்திருக்கும்.                                                                                                        தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles