மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்

மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!

1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார்.

இலங்கைவாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.

தோட்ட தொழிலார்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அன்னார் மலையகத்தின் மன்னராகவும், மாமனிதராகவும் இன்றுவரைக்கும் போற்றப்படுகின்றார்.

மலையகத்தின் மூத்த அரசியல்
தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார். தனது 89வது வயதில் இயற்கை எய்தும் போது அன்னார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுடைய வாழ்வியலில் பின்னிப் பினைந்த நாமமே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடைய நாமம் ஆகும். மலையக அரசியலில் பிதாமகன் என்று புகழாரம் சூடாதவர்கள் எவரும் இல்லை.

1947 ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து மலையக மக்களுடைய வீட்டுரிமை, நாட்டுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது 1952 ஆம் ஆண்டுகளிலே பல்வேறு சத்தியாகிரகங்களையும், போராட்டங்களையும் செய்து மலையக மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த பெருந்தகையே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

1987 ஆம் ஆண்டு விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து சத்திய கடதாசியை சமர்ப்பித்து பிரஜா உரிமை, வாக்குரிமை, நாட்டுரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்து இன்றும் எம் மக்கள் வாக்களித்து பல அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அனுப்புகின்றார்கள் என்றால் அதற்கு காரணமானர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே.

Related Articles

Latest Articles