மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எமது அணி தொடர்ந்தும் குரல் எழுப்பும் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
” எதிர்க்கட்சிக்கான பொறுப்பை எமது அணியே கடந்தகாலங்களில் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. அனைத்து துறைகளுக்காகவும் குரல் எழுப்பியுள்ளோம். அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து நாட்டுக்கு எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
ஜே.வி.பி. உறுப்பினர்கள் திருடர்களுக்கு எதிராக குரல் எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் எம்மை தோற்கடிப்பதற்கு நிதி வழங்கப்படும் என கம்பனியொன்றின் பிரதானி குறிப்பிட்டுள்ளார். எமது அரசியல் கொள்கை திருடர்களுக்கு வலிக்கின்றது. இதனால்தான் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பணம் வழங்கப்படுகின்றது. திருடர்கள் எம்மை எதிர்ப்பதுகூட எமக்கு அரசியலில் கிடைத்த வெற்றியாகும்.
மக்கள் எமக்கு ஒருமுறை வாய்ப்பை வழங்கவேண்டும். ஆட்சிசெய்யமுடியாவிட்டால் நிச்சயம் அடுத்தமுறை வரமாட்டோம்.” – என்றார்.