” எமது மக்களின் நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடுகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தேன். அதைவிடுத்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு எமது மக்கள் நலன் குறித்த எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாமல் கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டு வெறுமனே இருக்கமுடியாது.” –
இவ்வாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் வாழ்வாதரங்களுக்கான உரிமைகளுமின்றி அடிப்படை வசதிகளுமின்றி எமது சமூகம் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பினால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இம் மக்களினால் இருமுறை ஏகமனதாக நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். என்னை எமது மக்கள் தெரிவு செய்தபோதிலும் நான் போட்டியிட்ட கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. அதனால் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்கவேண்டியநிலை எனக்கு ஏற்பட்டது.
எனது ஒருவாக்கின் மூலம் மட்டும் 20 வது திருத்தச்சட்ட மூலம் வெற்றி பெறவாய்ப்பில்லை. நான் வாக்களிக்காவிட்டாலும் 20வது திருத்தச் சட்ட மூலம் நிறைவேறியே இருக்கும். மற்றும் இச்சட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்திருக்கும் எமது சமூகத்தினரும் எமது நாட்டின் தேர்தலில் போட்டியிடவாய்ப்புக்கள் ஏற்படும். அவ் வாய்ப்புக்களினால் எமது சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கவேசெய்யும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை மூலமே சிறுபான்மை சமூகத்திற்கு பயன் கிடைக்கும் என்று அனுபவ ரீதியாக எமது சமூகம் கண்டுள்ளது.
எமது மக்கள் என்னை தெரிவு செய்தமை பெரும் எதிர்பார்ப்பின் மத்தியிலேயாகும். எமது மக்களுக்கு இருந்துவரும் அபிலாசைகள், தேவைகள், விருப்புக்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏராளம்.
அவற்றினை எதிர்க்கட்சி வரிசையிலிருந்துகொண்டு, என்னால் முன்னெடுக்கமுடியாது. குறைந்தபட்சம் தொடர்ந்துவரும் ஐந்து வருடங்களுக்கு எமது சமூகத்தினரின் ஒருவருக்காவது ஒருதொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கமுடியாது.
அதனை என்னால் ஜீரணித்துப் பார்க்கக்கூட முடியாது.
தொடர்ந்துவரும் 5 வருடங்களுக்கு நான் எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு, பாராளுமன்றக் கதிரையை அலங்கரித்துக் கொண்டும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போயிருக்கலாம். அதனை என்னால் செய்யமுடியாது. எமது சமூகத்தை ஏமாற்றவோ, அவர்களுக்கு பொய் கூறவோ என்னால் இயலாது. அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். அதற்கானஒரே வழி அரசுக்கு ஆதரவுவழங்குவதேயாகும்.
எனது இம் மாற்றத்தினை எமது மக்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்துவரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளுமே சான்று பகர்கின்றன.” – என்றார்.