மலையகப் பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்களை ரயிலில் எடுத்துச் செல்ல திட்டம்

காய்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட மலையகப் பகுதியிலிருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

அதன்படி ஹாலியெல, ஓஹிய, அம்பேவல, பட்டிப்பொல, நானு ஓயா போன்ற ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு பொருட்கள் போக்குவரத்து மற்றும் பாரிய அளவில் விற்பனையில் ஈடுபடும் தனியார் பிரிவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மலையக பிரதேசங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழங்களை சரியான முறையில் உயர்ந்த தரத்துடன் தலைநகர் உள்ளிட்ட ஏனைய பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே திணைக்களம்விசேட ரயில் பெட்டிகளை பயன்படுத்தி பரீட்சாரத்த ரயில் சேவை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

அதன் தற்போதைய நிலைமை மற்றும் பரீட்சார்த்த போக்குவரத்து சேவை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அதிகாரிகள் மற்றும் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கிய தனியார் துறை நிறுவன அதிகாரிகளிடம் விடயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்படி தற்போது பயணிகள் போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்ட ஐந்து ரயில் பெட்டிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர். அத்துடன் இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு ரயிலில் மரக்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு செல்வதில் பின்பற்ற முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் விடயங்களை முன் வைத்தனர்.

மேலும் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சரியான முறையில் மற்றும் சுகாதார பாதுகாப்புடன் குறைந்த விலையிலும் குறைந்த நேரத்திலும் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் தற்போது அந் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்பொருள் அங்காடி வலைய அமைப்புகள் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் அமைப்புகள் பின்பற்றும் முறைகள் தொடர்பாகவும் அங்கு அந்நிறுவனம் பிரதிநிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டது. அனைத்து விடயங்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு மிகவும் போட்டி ரீதியான முறையில் இந்த போக்குவரத்து நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் தேவையை சுட்டிக்காட்டிய அமைச்சர் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரப்பாரின் ஒப்புதலுடன் இது தொடர்பான விரிவான விடயங்கள் உள்ளிட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்காக தற்போது கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பொருளாதார நிலையங்களுக்கு லொறிகள் மூலம் மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் விநியோகஸ்தர்களின் நேரடி கருத்துகளை பெறுமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles