என்னய்யா இப்படி ஏடாகூடமாக கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள் சற்று பொறுமையாக வாசியுங்கள். நான் சேவையாற்றுகின்ற பிரதேசம் ஸ்டெலன்பேர்க் (கந்தலா) கண்டி மாவட்டத்தில் தொலுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்நிலப்பிரதேச மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர்.
போக்குவரத்து,பாதை போன்ற விடயங்களுக்கப்பால் இதுவரை பேசப்படாத எவ்வளவோ விடயங்களை மக்கள் மனதில் வடுக்களாய் சுமந்துகொண்டிருக்கின்றனர்.
இப்பிரதேச பாடசாலையில் அதிபராக கடமையாற்றும் நான் இவ்வாறான விடயங்களை பேசுகின்றபோது ‘நீயேன் தேவையில்லாத விடயத்தில் தலையிடுகிறாய்’ என கேட்கின்ற அறிவு ஜீவிகளையும் கண்டிருக்கின்றேன்.
அப்போதெல்லாம் எனது சமூகதின்பால் அக்கறைகொண்டுள்ள அறிவார்ந்தவர்களை எண்ணி மனம் வருந்துவதுண்டு.
அதிபர் – தான் சேவையாற்றுகின்ற பாடசாலையை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் அவர்சார்ந்த சமூகப்பிரச்சினைகளை யார் பேசுவது? இப்படி ஒவ்வொருவரும் இருந்துவிட்டு போனால் எதிர்கால நம் அறிவார்ந்தவர்கள் ‘மலையகம் 400’ யையும் இந்நிலையிலேதான் கொண்டாடுவார்கள்.
சரி,விசயத்திற்கு வருகிறேன்.
பட்டதாரிகள்,ஆசிரியர்கள் ஏன் வைத்தியர்வரை உருவாகியிருக்கிற இப்பிரதேசத்தில் இன்றுவரை முறையான தபால் விநியோகம் இன்மையால் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
கல்வித்திணைக்களங்கள்,அரச,தனியார் நிறுவனங்களிலிருந்து வருகின்ற கடிதங்கள் காலந்தாழ்த்தியே எமக்கு கிடைக்கின்றது. தோட்டக் காரியாலயத்தில் தொழில்புரிகின்ற ஒருவரால் இக்கடிதங்கள் புபுரஸ்ஸ தபால் நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்டாலும் தோட்டக்காரியாலயத்தில் கிடந்து பலசமயம் காலந்தாழ்ந்தியே கிடைக்கிறது. சில வேளைகளில் பாடசாலை மாணவர்களை அனுப்பியே கடிதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு காலந்தாழ்ந்த்தி கிடைக்கப்பெற்ற நேர்முகத்தேர்வு கடிதங்களால் கல்வியியற் கல்லூரி வாய்ப்பினை இழந்த மாணவர்களும் உண்டு. என்ன செய்ய எல்லாம் தலைவிதியென்று ஒதுங்கிக்கொள்ள அமைதியாய் பதவியை காத்துக்கொண்டு ஓய்வூதிய உயிலுக்காய் உட்கார்ந்திருந்தால் இப்பிறப்புக்கே அர்த்தமில்லை. வாயடைத்தும், கண்கள் மூடிக்கொண்டும்,செவிகளை இறுக்க மூடிக்கொள்வதா ஆளுமையின் இலக்கணம். கூற வேண்டியவர்களுக்கெல்லாம் கூறிவிட்டோம். ம்ம் கந்தலா கிழக்கு வெளுத்தபாடில்லை.
போதாமைக்கு ஒரு பிரதேசசபை உறுப்பினரும் இப்பிரதேசத்தில் இருக்கிறார். நாம் கேட்பதெல்லாம் பொன்னும் பொருளுமா? எங்களுக்கென்று வருகின்ற கடிதங்களை முறையாக பகிர்ந்தளிக்கக்கூடிய ஒரு தபால் உத்தியோகத்தரைத்தானே….
இக்கட்டுரையை வரைவதற்கு முக்கிய காரணம் அண்மையில் கல்விக்காரியாலயத்திலிருந்து மார்ச் மாதம் அனுப்பப்பட்ட முக்கிய கடிதமொன்று மே மாதம் வந்து கிடைத்தமையால் வேறு வழியின்றி முகநூலில் இவ்விடயத்தை எழுதுகின்றேன்.
ஏனெனில் இதனை பலரும் பார்வையிடலாம் இவ்விடயம் தொடர்பாக தீர்வை பெற்றுத்தரும் அரச அதிகாரிகள் இருக்கலாம்.
இல்லையெனில் நமக்கெதற்கு வம்பென்று ஒதுங்கிக்கொள்ளாத சமூக நலன்விரும்பிகள் இருக்கலாம் நிச்சயம் இதற்கொரு தீர்வு கிடைக்குமென்று நம்பி இதனை எழுதுகின்றேன்.
வாசிப்பவர்கள் என் கவிதைக்கு வழங்குகின்ற “அருமை,சபாஷ்,சூப்பர்’போன்ற சொல்லாடல்களை தவிர்த்து நமது சமூகப்பிரச்சினைக்கு தீர்வுவொன்றை பெற்றுத்தர உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். பலருக்கு இது கேளிக்கையாக இருக்கலாம். களத்தில் நிற்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும். வாசியுங்கள்,யோசியுங்கள்.
“மலையகம் 200′ கொண்டாட்டமா திண்டாட்டமா என்று புரியும்.
‘ காத்தே இங்கு வீசல
காத்தாடி கேக்குதா”
Thank you Dhanush
………………..
தே.கணபதி – அதிபர்
– கந்தலா தோட்ட மக்களுக்காக –










