“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஏனெனில் மஹிந்தவுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்நாட்டில் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்காமல், அவரை வீட்டுக்குள்ளேயே முடக்கி, அரசியலில் இருந்து ஓய்வுபெற வைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. மஹிந்தவைக் கண்டு தற்போதைய அரசாங்கம் அஞ்சுகின்றது.
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு போதாது என அவரின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்நிலையிலும் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டை மீட்ட தலைவரை நாம் நிச்சயம் பாதுகாப்போம்.
புலிகளை ஒழித்த தலைவருக்கும், புலிகளுடன் பேச்சு நடத்தியவர்களுக்கும் ஒரே அளவான பாதுகாப்பை வழங்குவது நியாயமா?” – என்றார்.
