மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு டலஸ் அணி வலியுறுத்து

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி கதைக்கின்றார். ஆனால் மக்களுக்கு தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு தேர்தலொன்று இல்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு வாக்குகளை இலக்கு வைத்தே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி ஜனாதிபதி பேசுகின்றார். அதேபோல நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திசை திருப்பவே முன்கூட்டிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தகவல்கள் பரப்படுகின்றன.

இந்த ஜனாதிபதி முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த மாட்டார். ஆனால் 2024 ஜுலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு கட்டாயம் வெளியாக வேண்டும். இதனை எவரும் பிற்போட முடியாது. அரசமைப்பிலும் அதற்கு இடமில்லை.

இந்நிலையில் எதிரணிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது. இந்த வலையில் எதிரணிகள் சிக்கிவிடக்கூடாது. கூட்டு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். .இதற்கிடையில் அரசுக்குள்ளேயே தற்போது எதிரணியொன்று உருவாகிவருகின்றது. இந்த வாய்ப்பை எதிரணிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles