தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரச ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, அவர்களின் ஆசியுடன்தான் இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. எனினும், நம்பி வாக்களித்த அரச ஊழியர்களை அரசு தற்போது கைவிட்டுள்ளது.
ஐ.எம்.ப். பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து மின்சாரத் துறையினர் குறித்து கலந்துரையாடிய போது, மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகள் பற்றி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே கதைத்தது. ஏனைய கட்சிகள் மௌனம் காத்தன.
23,000 தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களினது தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, மின்சாரத்துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுத்திருக்கப்பட வேண்டும்.
தேர்தல் மேடையில் இருந்து கொண்டு அரச ஊழியர்களின் உரிமைகள் குறித்து வீராப்புப் பேசிய ஜே.வி.பினருக்கு இன்று அவர்களின் உரிமைகள் குறித்துப் பேச முதுகெலும்பில்லை.
மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்குமாறு நான் சகலரையும் கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார் சஜித்.