மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு விபத்தில் உயிரிழப்பு!

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குருவும் சிலாபம், முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவி சமேத முன்னைநாதப் பெருமான் ஆலயத்தின் மகோற்சவ குருவுமான சிவ= சிவானந்த குருக்கள், நேற்றுக் காலை விபத்தில் சிக்கி மரணமானார்.

கண்டி அங்கும்புர பிரதேசத்தில் கெப்பத்திகொல்ல பகுதியிலுள்ள ஆலயமொன்றின் பாலஸ்தாபன கிரியைகளுக்காக முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மிக வேகமாகச் சென்ற முச்சக்கரவண்டி பிரேக் பிடிக்காத காரணத்தினால் வேகக்க கட்டுப்பாட்டையிழந்து, அருகிலிருந்த மதில்மேல் மோதி விபத்துக்குள்ளானது. சாரதியின் கை முறிந்துள்ளதாகவும் பிரதம குருவுக்கு நெஞ்சுப் பகுதியில பலத்த அடி, ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அங்கும்புற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும், அவரது நிலைமை மோசமாக இருந்ததால், அவசரமாக கண்டி, போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆஸ்பத்திரியின் வெளிநோயளர் பகுதிக்கு எடுத்துச் சென்ற போது, அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

60 வயதான சிவஸ்ரீ சிவானந்த குருக்கள், தமது தந்தைக்கும், தமையனுக்கும் பின்னர், மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குருவாகப் பதவியேற்றார்.

இவர் கடந்த 35 வருட காலம் இறை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வருடாந்தம் நடைபெறும் சிலாபம் முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவி சமேத முன்னைநாதேஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தின் போது மகோத்சவ குருவாக செயற்பட்டு வந்துள்ளார்.

Related Articles

Latest Articles