‘மீனவர் பிரச்சினை’ – இரு தரப்பு கலந்துரையாடலை உடன் ஆரம்பிக்கவும்!

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, சுமுகமான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும், இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக மிகுந்த பாரம்பரியத்துடன் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஆனால் தற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் இரு நாட்டு மீனவர்களுக்குமே சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக இரண்டு தரப்பினரும் அமைதியாக அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது கட்டாயமாகும்.

இதன்போது சர்ச்சையாக இருக்கின்ற பகுதிகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரண்டு தரப்பினரும் சுமுகமாக தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்ற வகையிலும் தீர்வை எட்ட வேண்டும்.

இந்திய அரசும் சரி இலங்கை அரசும் சரி இந்த மீனவர்களின் பிரச்சினையை ஒரு முக்கிய பிரச்சினையாக அதாவது தலையாய பிரச்சினையாக கருதி செயற்பட வேண்டும்.இரண்டு நாடுகளுக்கும் வெளிநாட்டு செலவாணியை பெற்றுக் கொடுப்பதில் இரு தரப்பு மீனவர்களும் முக்கிய பங்காற்றுகின்றார்கள்.

இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்று தற்பொழுது அது தடைப்பட்டுள்ளது.முதலாவதாக இலங்கையிலும் பின்பு இந்தியாவிலும் என மாறி மாறி நடைபெற்றது.எனவே அந்த பேச்சுவார்த்தையை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இந்த பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலமாக இரண்டு தரப்பினரும் மனம் திறந்து பேச முடியும்.அப்படி பேசுகின்ற பொழுது இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles