காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன.
கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், இது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டு, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் 46,700 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 110,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காசாவின் 2.3 மில்லியன் மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்தில், போர் நிறுத்தம் உள்ளடங்கியுள்ளது.
முதற்கட்டமாக 33 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யவுள்ளது.
அதற்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 50 பாலஸ்தீன கைதிகளை ஹமாஸால் விடுவிக்க வேண்டும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல், முதல் கட்டத்தின் 16வது நாளுக்குள் ஆரம்பமாகும்.
மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்பப் பெறுதல் என்பன இரண்டாம் கட்ட நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.
மூன்றாம் கட்டமாக, எகிப்து, கத்தார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் காசாவின் மறுகட்டமைப்பு தொடங்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தம் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மீதமுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான ஹமாஸின் முக்கிய கோரிக்கைகளான காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை முழுமையாக திரும்பப் பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.