புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 190 குடும்பங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையும், சுகாதார ஏற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (09.10.2020) இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.
புபுரஸ்ஸ, போமன்ட் தோட்ட பங்களாவில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட ஏனைய பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது முடக்கப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட பிரிவில்வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவது தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகளை முன்னாயத்தமாக வைத்திருப்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன. அத்துடன், தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெடுக்கவேண்டியவேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள், கம்பளை, புபுரஸ்ஸ – மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் உள்ள தமது வீடுகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளனர்.
இந்நிலையில் மினுவாங்கொடை கொத்தணி பரவலையடுத்து இவ்விரு பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், நிவ்போரஸ்ட் டிவிசனும் முடக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவு நேற்று (9) வெளியானது. இதில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
அதேவேளை,இப்பகுதி மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியிருந்தார்.