உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை மூடிமறைப்பதற்கே கடந்த காலங்களில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் விசாரணை முறையாக இடம்பெறுகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தவர்கள் கலக்கமடைய ஆரம்பித்துள்ளனர் – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார், ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து எதிரணியில் உள்ளவர்களுக்கு ஏன் இப்படி குழப்பம் அடைந்துள்ளனர் என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
சிஐடியினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரால் விசாரணைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சாட்சியங்கள் பெறப்பட்டுவருகின்றன. எனவே, ரணில், கம்மன்பில, நாமல் உள்ளிட்டவர்கள் கலக்கமடைய வேண்டியதில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஆறு வருடங்களாகின்றன. இந்நிலையில் கடந்த ஐந்தரை வருடங்களில், தாக்குதலை மூடிமறைப்பதற்கான முயற்சிகளே இடம்பெற்றன. தற்போதுதான் உண்மையாகவே விசாரணை நடக்கின்றது. எதிரணிகளின் கலக்கத்துக்கு என்ன காரணம் என்பது தெளிவாகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன. அவை சரியான வழியில் நடக்கின்றன என்பதையே எதிரணியினரின் கலக்கம் வெளிப்படுத்துகின்றது.” – என்றார்.










