யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.

இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலகம மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் வைத்தியசாலை சேவையை தொடர்ந்து முன்கொண்டு செல்வது சவாலுக்குரியது என வைத்தியசாலை ஊழியர்கள் எச்சரித்துள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Related Articles

Latest Articles