யோசிதவுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படுமா?

தனிப்பட்ட பாதுகாப்புக்காக நபரொருவருக்கு இனி ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் எனவும், அதுவும் புலனாய்வு பிரிவின் மதிப்பாய்வுக்கமையவே வழங்கப்படும் எனவும்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனிநபர்களின் பாதுகாப்புக்காக கடந்த வருடம் வழங்கப்பட்டிருந்த ஆயிரத்து 697 துப்பாக்கிகளில், ஆயிரத்து 368 துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 182 துப்பாக்கிகள் கையளிக்கப்படாமல் உள்ளது.

துப்பாக்கிகளைப் பெற்றவர்கள் வெளிநாட்டில் வேலையில் உள்ளனர், மேலும் சில காரணங்களும் உள்ளன. எனினும், நாம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றோம். துப்பாக்கிகளை மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய பணியும் ஆரம்பமாகியுள்ளது.

தனிநபர்களின் பாதுகாப்புக்கென ஒரு துப்பாக்கிதான் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கி அவசியம் என புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தினால்தான் அதுவும் வழங்கப்படும்.
யோசித ராஜபக்சவிடம் தற்போது இரு துப்பாக்கிகள் உள்ளன. அதனை ஒன்றாக்க வேண்டும். அதனை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றை வழங்குவது பற்றியும் புலனாய்வு மதிப்பீடு செய்யப்பட்டே தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles