ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை 35 ஆண்டுகளாக வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. அந்த சக்திகளை தோற்கடித்து அடுத்த 12 வருடங்களுக்கு ஆளும் அதிகாரத்தை நாட்டு மக்கள் அவருக்கு வழங்கினால் இலங்கை ஆசியாவில் பலமான நாடாகும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” இலங்கையை பலவீனமான ஒருவர்தான் ஆள வேண்டும் என்பதே வெளிநாட்டு சக்திகளின் நோக்கம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை தாம் தடுத்ததாக கிராம மக்கள் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. வெளிநாட்டு சக்திகளே தடுத்தன.
எனவே, அடுத்த 12 வருடங்களுக்கு ஆட்சி செய்வதற்குரிய அனுமதியை நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினால், இலங்கை ஆசியாவில் பலமான நாடாக விளங்கும். அவ்வாறு இல்லையேல் கடும் சவால்கள் ஏற்படும். இதுவே உண்மை.
வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீட்டார். எனவே, தேசிய வேலைத்திட்டத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும். ” – என்றார்.










