பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிரேஷ்ட நிர்வாக செயலாளரான எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார்.
தொழில் ஆணையாளர் தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தேசிய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட எஸ். விஜேகுமாரன் கூறியதாவது,
” இன்றும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆயிரத்து 700 ரூபாவுக்கு மேல்தான் எமக்கு அவசியம். ஆனால் ஆயிரத்து 700 ரூபாவைக்கூட வழங்குவதற்கு கம்பனிகள் தயாரில்லை என்பதுபோல்தான் தெரிகின்றது. எது எப்படி இருந்தாலும் ஆயிரத்து 700 ரூபாவுக்கு குறைவான சம்பளத்தை பெற நாம் தயாரில்லை.” – என்றார்.
அதேவேளை, ” அடுத்துவரும் கூட்டங்களின்போது சம்பளம் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு முடிவொன்று எடுக்கப்படும்.” – என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.










