அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு , கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்டது எனவும், 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியா தலையிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,
” வடக்கில் கிழக்கிலாவது முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த சொல்லுங்கள். போலிஸ் அதிகாரத்தை பிரச்சினையாக்கி மாகாணசபையை மறுப்பது நியாயமல்ல.
இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பியுங்கள்.
அதன்மூலம் இந்திய அரசின் முன்னூறு கோடி நன்கொடையை மலையக கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அந்த நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ, அதற்காக பயன்பட வேண்டும்.” – என்றுள்ளது.
