வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா?
அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட முழுமையாக அற்ற ஒரு பின்தங்கிய தோட்டமாக வட்டவளை, லோனக் தோட்டம் காணப்படுகிறது.
இத்தோட்டத்துக்கு செல்லும் வீதியில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் 10 வருடங்கள் கடந்தும் இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளது.
வட்டவளை நகரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடமே லொனக் தோட்டமாகும்.
இதில் 2015 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக சுமார் 9. 5 கிலோ மீட்டர் தூரம், வட்டவளை நகரத்திலிருந்து அகரவத்தை ஊடாக வெளி ஓயா வழியாக ஹட்டன் பிரதான வீதி இணையும் இடம் வரை முழுமையாக செப்பனிட்டு இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2017 12 6 மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அத்துடன், அகரவத்தை சந்தியிலிருந்து லோனக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமும் நல்லாட்சியில் புனரமைக்கப்பட்டது.
எனினும் எஞ்சிய மூன்று கிலோமீட்டர் பாதை குன்றும் குழியுமாக வயல் நிலம் போல் காட்சியளிக்கின்றது எனவும், போக்குவரத்திற்கு உகந்த நிலையில் இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே புதிதாக ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதியை புனரமைத்து தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட்டவளை கேதீஸ்










