விமான விபத்து: 204 பேரின் சடலங்கள் மீட்பு!
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு மதியம் 1:38 மணிக்கு கிளம்பியது. புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் இந்த விமானம், விமான நிலையம் அருகே இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் பயணித்தனர். அவர்களுடன் 12 ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.
தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் மரணம்
இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்துள்ளார். அவர், லண்டனில் இருக்கும் தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் உயிர் இழந்து விட்டதாக, இன்று இரவு 7 மணியளவில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
டிஜிசிஏ விளக்கம்
விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.
இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறது. இவ்வாறு டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவ மாணவர்கள் பலி
விமானம் நொறுங்கி விழுந்ததில், அந்த இடத்தில் அமைந்திருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.