வெறுமனே சத்தம் போடுவதால் எதுவும் நடக்காது: அதிகாரத்தை பயன்படுத்துங்கள்

இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்டத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு வெறுமனே கூச்சல் போட்டு ஊடகங்களில் இடம் பிடித்துக் கொள்வதால் மாத்திரம் எதுவும் நடந்து விடப் போவதில்லை . அதற்குப் பதிலாக அராசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டும்

என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது அறிக்கையில்,

” நான் அமைச்சராக இருந்த நேரத்தில் தெரணியகல நூரி தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவர் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளைக் காட்டியும் அவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும் அராஜக நிர்வாகத்தை நடத்தி வந்தார். இது சம்பந்தமாக அங்குள்ள தொழிலாளர்கள் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்கள். நான் எனக்கிருந்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக ஐ.ஜி. இடம் கதைத்து உடனடியாக தோட்ட முகாமையாளரைக் கைது செய்யவும், நூரி தோட்டத்திலிருந்து வெளியேற்றவும் தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

இதற்கு தெரணியகல தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சுசுமந்த எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார். இதுதான் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும்

ஆனால், இன்று இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்டத்தில் இடம்பெற்ற அசாம்பாவிதம் மேலும் சிக்கலாகி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் கொள்ள வைத்துள்ளது. எனது அருமை நண்பரும் சமூக உணர்வு மிக்கவருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சம்பவம் இடம்பெற்ற தும்பரை தனியார் தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தமை வரவேற்கக் கூடிய விடயமாகும். ஆனால் அவர் அரசாங்கத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் உள்ளதை மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த விடயத்தை உடனடியாக ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு எதுவும் செய்யாமல் மக்கள் மத்தியில் ஆவேசமாக உரத்த குரலில் பேசிவிட்டு வந்துள்ளார்.

நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். இங்கு இனவாதம் தலைதூக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், இரத்தினபுரி, களுத்துறை, தெனியாய போன்ற மாவட்டங்களில் நிலைமை அவ்வாறு இல்லை. அங்கு பெரும்பான்மை மக்கள் மக்தியில் தமிழ் மக்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் மெய்ப் பாதுகாவலர்களோடு அங்கு சென்று வீர வசனம் பேசி விட்டு வந்து விடலாம். அவர்கள் வந்த பிறகு கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க வேண்டியது மக்கள் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் அமைச்சராகவோ ஜனாதிபதியின் ஆலோசகராகவோ இருந்திருந்தால் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பையும், நீதியையும் பெற்றுக் கொடுத்திருப்பேன். தோட்ட முகாமையாளரின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறன்.

Related Articles

Latest Articles