வெலிமடையில் ஒரு கிலோ அரிசிக்கு 5 ரூபா மேலதிக அறிவீடு: நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமை தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெலிமடை பிரதேசத்திலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ரூ. 500,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் பிரதிவாதி நிறுவனமாகக் குறிப்பிடப்படுவது
நுவரெலியா வீதி, வெலிமடை என்ற முகவரியில் அமைந்துள்ள நிறுவனமாகும்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பதுளை மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் 2025 டிசம்பர் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இந்தச் சட்ட மீறல் கண்டறியப்பட்டது.

இதன்போது இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (GR 11) அரிசி ஒரு கிலோகிராமிற்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை ரூ. 255/- ஆக இருந்த நிலையில், அதே அரிசி ஒரு கிலோகிராம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு ரூ. 260/-க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ. 5/- அதிகமாக அறவிடப்பட்டிருந்தது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகளை நடைமுறைப்படுத்துதல், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

📞 அதிகபட்ச சில்லறை விலையை மீறிப் பொருட்களை
விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.வெலிமடையில் ஒரு கிலோ அரிசிக்கு 5 ரூபா மேலதிக அறிவீடு: நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

Related Articles

Latest Articles