வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த நபருக்கு மறியல்!

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.

பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பின்னவள பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி தன்னிடம் 785,000 ரூபா பணம் பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபர் மேலதிகமாக 25 நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பலாங்கொடை மேலதிக நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எம்.எவ்.எம். அலி

Related Articles

Latest Articles