ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 9.15 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டகலைப் பகுதியிலிருந்து டயகம நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும், மஸ்கெலியா பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் இவ்வாறு மோதியுள்ளன.
மஸ்கெலியா பகுதியிலிருந்து வந்த முச்சக்கர வண்டி, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் சாரதிகள் மாத்திரமே பயணித்துள்ளதுடன், இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
இரண்டு வாகனங்களும் பலமாக மோதிக்கொண்டதன் காரணமாக அவற்றுக்குப் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
